adsinr

எனது முதல் கவிதை.....

"வாழ்க்கையில் முதலில் வந்த
விபரீத ஆசை
வகுப்பில் நடந்த கவிதை போட்டியில்
ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
ஆசை வந்த போது வயது பதினாறு


யாரை பற்றி எழுத, எதை பற்றி எழுத
என்ன ஓட்டங்கள் தாறுமாறாய்
இருப்பதோ எட்டு திசைகள்
எண்ணம் போனது பத்து திசைகள்
புரியவில்லையா அவை
மேலும் கீழுமாகவும் போனது


அப்பா அம்மா அடுத்த வீட்டுப்பெண்
யாரும் சரிவரவில்லை வார்த்தைகளுக்கு
முடிவாக எடுத்த முடிவு
கவிதைகள் எழுத சிறந்த இடம்
பூங்கா என்று
சென்றேன் புல் மேல் இருந்தேன்
கிடந்தேன் உருண்டேன் புரண்டேன்
கவிதை வரவில்லை
காவலாளி வந்தான்


என்ன இங்கே உனக்கு வேலை என்றான்
படிக்க வந்தேன் என்றேன்
படுக்க வரவில்லையே என்றான்
பாவம் போல முழித்தேன்
பரிதாபபட்டு போய்விட்டான்


பேனாவை திறந்து வைத்து காத்திருந்தேன்
மை காய்ந்து போனது
என் கற்பனைகளை போல
தமிழ் அய்யா சொன்னது நினைவில் வந்தது
எதையும் ஆழமாக கவனி
அப்போது தான் கவிதையும் வரும்
காதலும் வரும் என்று


கவனித்தேன் மரங்களை, செடிகளை
மரத்தில் வந்து அமர்ந்த பறவைகளை
பூக்கள் மேல் அமர்ந்த வண்டுகளை
புல் மேல் அமர்ந்த தத்து கிளியை
ஓரத்தில் படுத்துக்கிடந்த தொத்தல் நாயை
முடிவாக கவிதை பிறந்தது


"வானத்தில் பறந்த சிட்டு கீச் கீச் என்றது
மொட்டில் அமர்ந்த வண்டு ரீங் ரீங் என்றது
கிளையில் அமர்ந்த கிளிகள் கீ கீ என்றது
கல்லுக்கு அடியில் தேரை கர் கர் என்றது
சோம்பிக்கிடந்த நாய் லொள் லொள் என்றது
வந்து போன மனிதர்கள் வள வள என்றார்கள்"


இத்துடன் என் சிந்தனை நின்று போனது
உண்மையில் இறைவனுக்கு தமிழ் தாய்
நன்றி சொல்லி இருப்பாள் அன்று


மறுநாள் காலை தமிழ் வகுப்பு
வரிசையாக அனைவரும் கவிகள் படிக்க
வந்தது என் முறை ..... படித்தேன் .....


"வானத்தில் பறந்த சிட்டு கீச் கீச் என்றது
மொட்டில் அமர்ந்த வண்டு ரீங் ரீங் என்றது
கிளையில் அமர்ந்த கிளிகள் கீ கீ என்றது
கல்லுக்கு அடியில் தேரை கர் கர் என்றது
சோம்பிக்கிடந்த நாய் லொள் லொள் என்றது
வந்து போன மனிதர்கள் வள வள என்றார்கள்"


படித்து முடித்த மறு நிமிடம்
அனைவரும் கொள் கொள் என்று சிரித்தார்கள்


அய்யா அருகில் வந்தார்
என் தோள் தட்டி, முகம் தூக்கி
ம்ம் கன்னி முயற்சி..........நன்று

சிட்டு, கிளி, தேரை, நாய் கூறியது
எல்லாம் இருக்கட்டும்
கவிதை முடிவில் எமக்கு நீ
என்ன கூறப்போகிறாய் என்று

அய்யா முகம் பார்த்தேன்
ஆறுதலாய் இருந்தது
கண் மூடி ஒரு நிமிடம் யோசித்து
கவி முடித்தேன் இவ்வாறு

கண்மூடி, புல்வாசம்
கிளிப்பேச்சு, குயில் பாட்டு
கேட்கையிலே....... இயற்கையே
உன்னை பாட
வார்த்தை இன்றி.............
ஊமை ஆகி போனேனே


உமையாகி போனேன் என்று தப்பிவிட்டாய்
அருமை விகட கவியாக வருவாய் என்று
அய்யா ஆசியுடன் அன்று தந்த ஆறுதல் பரிசு
அடைந்த மகிழ்ச்சிக்கு இன்றுவரை இல்லை ஈடு"