adsinr

Friday 23 December 2011

முடிவில்லா மரணம்...

"சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.

இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் ´வெள்ளை´ என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.

பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடி வதங்கியபடி கண்டதும் செல்வமலர் சந்தோசம், துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய “பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா..?!" என்றபடி கட்டியணைத்துக் கதறினாள். ´களத்தில் நின்றபோதும் அம்மா, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை´ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் செல்வமலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும், அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது அவர்கள் தீர்த்துக் கொண்டார்கள்.

கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வர முடிந்தது என்றாலும், இந்தச் சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் செல்வமலருக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சி வரை போன கணவன் கனகசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.

இப்போ, வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவார், என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.

“என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்திடோணும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன்…" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதி கொடுத்தாள். அவள் மன்றாட்டம் வீண் போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை கனகுவும் வந்து சேர்ந்து விட்டான். செல்வமலரின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.

நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். கனகுவுக்குக் கூட அவளது குழந்தைத் தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்து விட்டு பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.

அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து ´அமைதி காக்க´ என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய பின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக்கோட்டில் வாழ்கின்ற செல்வமலரையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.

இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும், காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடு வரை வரவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் கடந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும், கொப்புளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.

கனகு மாங்காய்ப்பூட்டைக் கொண்டு போய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான். வலது பக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய வீதியிலும் சரி, இடது பக்கம் பல்லப்பையை நோக்கிய வீதியிலும் சரி எந்த வித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை. பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டி விட்டு உள்ளே வந்தவன் படுத்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.

மூன்று பிள்ளைகளும், கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவு போல் அந்தச் சத்தம் கேட்டது.

“கனகசுந்தரம்... கனகசுந்தரம்... கதவைத் திற."

முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்ட போதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.

´மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்குகிறேன்´ என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்டிருந்த கனகுவும் திடுக்கிட்டுக் கண் விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.

´அது இந்தியப்படைதான்.´ பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும், செல்வமலரும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.

“கனகசுந்தரம்..!"

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.

“டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா" செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி, கிசுகிசுப்பாக, தழதழத்த குரலில் ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.

“கனகசுந்தரம், கதவைத் திற!"

மீண்டும் அதட்டலாய் ஒலித்த அந்தக் குரல் செல்வமலரினதும், கனகுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும், தீபிகாவும் உசாராகி விட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகி விட்டான்.

“அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப் போயிடடா." செல்வமலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து, துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.

“தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்." கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக் கொடிகள், ரோஜாச் செடிகள்… எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க, அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும், கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.

கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின் பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.

கவிதா வெலவெலத்துப் போனாள். “தம்பி போகாதை, இங்காலை வா" மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.

இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச் சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.

அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத் தனமாக அழுத்திப் பிடித்தது. “இங்கை புலி இருக்குது." பார்வையால் அவளை விழுங்கிய படியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். “இல்லை, இல்லை" செல்வமலர் நடுங்கிய படி மறுத்தாள். அவன் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன், நடுவீதியில் இருத்தினான்.

“ஐயோ… என்ரை பிள்ளையளும், மனுசனும் உள்ளை" கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும், கனகுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறி பார்த்து நீட்டிய படி நின்றான்.

கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். செல்வமலர்தான் அவனை அனுப்பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளைகளையும் இவர்கள் கண்களில் பட விடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்றும் அவளுக்குப் புரியவில்லை. பின் பக்கம் போன கவிதாவும், ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. ´எப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்.´ பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.

அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக் கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.

´என்ரை பிள்ளையைக் காட்டிக் குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?´ செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.

பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும், புட்டளையிலிருக்கும் புட்டளைப் பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.

இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

“தம்பி.., தம்பி.., எங்கையடா நீ.." கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.

சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை “அக்கா..!" என்ற படி ராஜன் கட்டிப் பிடித்தான்.

“அக்கா, தண்ணி.." திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.

“தம்பி..!" இறுகக் கட்டிப் பிடித்தாள்.

“அக்..கா.., தண்...ணி.."

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.

“விடு... என்ரை தம்பி" கவிதா திமிறினாள்.

“தம்பிக்குத் தண்ணி..." அவள் முடிக்க முன்னரே இன்னுமொரு முரட்டுக்கை அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது.

“அ..க்..கா..!" மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.

இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப் பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், “தம்..பி..!" குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள்.

மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.

நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக் களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர.. கனகு அவர்களிடம் போய் “என்ரை பிள்ளை..?" கேட்டான்.

“நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் ´புலி´ எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்டு எடுத்துக் கொண்டு போ." சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார்கள் அவர்கள்.

களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும், உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கனகசுந்தரமும், செல்வமலரும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

காலம் - 4.12.1987"

வழிகாட்டி....



"இந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன. அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவனுக்கு வேலை. ஐந்தாவது  தரமாய்ப் புறூவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத்துப் பிழைகள் கண்ணில் தட்டுப்பட்டன. வாணியிடம் கொடுத்திருந்தால் இப்படிப் பிழைகள் வந்திராது. முதலாவது தடவை புறூவ் பார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவளிடமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட்டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும் போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும் போது வரும் 'பிரிண்ட் அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து  தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்ய வேண்டியிருக்கிறது. சிங்கள, தமிழ்  ஆசிரியர்களை நிறுவகத்திற்கு அழைத்து அவர்களைக் கொண்டு எழுதுவித்து, அதைத் திருத்தி சிங்களத்தில் எழுதிப் புத்தகமாய் அச்சிடுவார்கள். சிங்களத்தில் உள்ள வழிகாட்டியை மொழிபெயர்ப்புச் செய்வதற்காய் ஒருவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். என்.ஜீ.ஓ.க்கள் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு பக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் செலுத்தும் போது, அரசாங்கச் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணப்படி மொழி பெயர்ப்புச் செய்வதற்கு எவர்தான் விரும்புவர்.  அரசாங்கச் சுற்றுநிரூபக் கட்டணத்தின்படி மொழி பெயர்க்க வருபவர்களில் அனேகமானோருக்கு நகர, ணகர, னகர பேதங்களோ லகர, ழகர, ளகர பேதங்களோ ரகர, றகர பேதங்களோ சரியாய்த் தெரிந்திராது. மொழிபெயர்ப்புச் செய்பவர் தரத்தர எடுத்து மொழியைச் செம்மையாக்கி, தட்டச்சுச் செய்ய தர்மினியிடம் அனுப்பி பல தடவை புறூவ் பார்த்து எல்லாம் சரி என்றால் பொருத்தமான இடங்களில் படங்களை ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பி... சில வேளைகளில்சிங்களத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்வார்கள. அதைத் தமிழிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அத்திருத்தங்கள் இல்லாமலேயே தமிழ்ப் புத்தகங்கள் வெளியாவதுமுண்டு.  பாடசாலைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் உருண்டு விட்டன. இன்னும் புத்தக வேலை முடிந்தபாடாய் இல்லை. சிங்களப் புத்தகம் டிசெம்பரிலேயே பள்ளிக்கூடங்களுக்குப் போய் விட்டது. தமிழ்ப் புத்தகம்..? இன்னும் ஆறேழு தரம் புறூவ் பார்த்து அச்சுக்கூடத்திற்கு அனுப்பினாலும், அது அங்கு கிடந்து தூங்கிப் பின்பு நிறுவகத்தின் களஞ்சியத்தில் கிடந்து, லொறிகளில் போய் மாகாணக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் என்று அலைந்து பள்ளிக்கூடங்களுக்குப் போய்ச் சேர இரண்டாந் தவணைத் தேர்வுகள் ஆரம்பமாகியிருக்கும்.  புறூவ் பார்த்து முடிந்த தாள்களை பைலில் இட்டு, தர்மினியிடம் அனுப்புவதற்காய் சில்வாவைத் தேடினான். அவனைக் காணவில்லை. அவன் இப்போது கன்ரீனில், வீரவங்ஸ செய்தது சரி என்றும் சோமவங்ஸவில் பிழை என்றும் யாரிடமாவது வாதிட்டுக் கொண்டிருக்கலாம்... அல்லது பணிப்பாளரின் வேலையாய் மகரகம சந்திக்குச் சென்றிருக்கலாம்.  பைலைத் தூக்கிக் கொண்டு 'ரைப்பிங் பூலு'க்குப் போனான். தர்மினி சோர்ட் லீவில் போய் விட்டதாக கணினியைப் பார்த்து ரைப் பண்ணிய படியே வாணி சொன்னாள்.  ' ஹாய் என்ன புதினம்' கன்ரீனில் இருந்து கதைத்து விட்டு 'ரைப்பிங் பூலு'க்கு வந்த கமலநாதன் கேட்டார். அவருக்கு இது தான் வேலை சந்திக்கும் எல்லோரிடமும் புதினம் கேட்பார். இவனுக்கு எரிச்சலாய் வந்தது.  ' சேர் இண்டைக்கு ஆறு பேருக்கு 'புறமோஷன் லெட்டர்' வருகிதாம்' பொய் ஒன்றை உதிர்த்து விட்டு அவர் அடுத்த கேள்விக்குத் தாவுவதற்கிடையில், விரைவாய் படிக்கட்டுக்களால் ஏறி மறைந்தான். இனிக் கமலநாதன் காணுகின்ற ஆட்களுக்கு இதைச் சொல்லித் திரிவார். திரியட்டும். மனதில் சிரிப்பு வந்தது.  •  சுதந்திர சதுக்க ஒழுங்கையால் இலங்கை மன்றக் கல்லூரியை நோக்கி நடக்கையில் இந்திரனுக்கு, மூன்று தரம் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவுத்துண்டையும் காட்ட வேண்டியிருந்தது. காலை வெய்யிலில் உடல் வியர்த்தொழுகிற்று.  வரவேற்புக் 'கவுண்டரி'ல் இருந்த 'லிப்ஸ்ரிக்' பூசிய இளம் பெண் நீட்டிய படிவத்தில் பெயர், பதவி, அலுவலக முகவரி என்பவற்றை எழுதி ஒப்பமிட்டுக்  கொடுத்தபோது அவள் புன்னகைத்துக் கொண்டு நீல வர்ண தோற் பையொன்றைக் கொடுத்தாள். பையின் மேற்புறத்தில் அரச இலச்சினையைப் பொறித்து அருகில் ' தல்விச் செயற்றிட்டம், தேசிய மாநாடு-2008' என்று மும்மொழிகளிலும் வெள்ளை நிறத்தில் அழகாக அச்சிட்டிருந்தார்கள். கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்கள். இதில் கூட எழுத்தப் பிழை. வெறுப்பாய் இருந்தது. பரவாயில்லை  மொழிகளுக்கு சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக் கொண்டான். கடையில் வாங்குவதென்றால் இந்தப் பை இரண்டாயிரம் ரூபாவுக்குக் குறையாது. அலுவலகத்திற்குக் கொண்டு திரியலாம். தொலைபேசி விபரக் கொத்தொன்றின் பருமனிலிருந்த, மாநாட்டில் வாசிக்கப்படப்போகும் அறிக்கைகள் மும்மொழிகளிலும் பையினுள் கிடந்து கனத்தன. இனிக் காலம் பூராக அலுவலகத்தின் அலுமாரியினுள் கிடந்து, தூசு படியப்போகும் அறிக்கை, 'சரஸ்வதி கபேயில் கொடுத்தால் கைதுடைக்க இரண்டு கிழமை சமாளிப்பார்கள்.  'ரெஸ்ட் றூமி'ல் போய் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து, தலைவாரி ரையைக் கட்டிக்கொண்டு நடந்தான். காலைச் சாப்பாட்டுக்கான வரிசையில் மாகாணங்களின் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள்...  நின்றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த அவர்களில் பலரை அவனுக்குத் தெரிந்திருந்தது. முன்னைய மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளில் சந்தித்துக் கொண்ட வழக்கமான முகங்கள். பண்டார, சுனில், றணசிங்க, பெர்ணாண்டோ, ரத்ணாயக்க, முனசிங்க, அபேசிங்க, குருப்பு, திருமதி ஜயசிங்க, திருமதி விஜேசிங்க,  சொய்ஸா,  வாமதேவன், குரூஸ், திருமதி விமலராஜா, திருமதி மரியதாஸ், ரங்கசாமி, அன்வர், நவ்சாத், திருமதி அஸ்வர், ராஜேந்திரம்...  வாமதேவன் 'கோட்' அணிந்திருந்தார். இவர் கப்பலில் வந்திருப்பாரோ இல்லை 'பிளைட்'டில் வந்திருப்பாரோ? செயற்றிட்டந்தானே பயணத்திற்குக் காசு செலவளிக்கின்றது.  ' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்து விடுகிறதா? இந்திரன் என்ற பெயரையே 'இன்ரன்' என்று வெள்ளைக்காரர் கதைக்கிறது மாதிரி உச்சரிக்கிறார்!  ' இருக்கிறன்.'  சாப்பிடும்போது அருகில் வந்தமர்ந்த வாமதேவன், கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றிக் கதைத்தார். ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...' பெருமை பொங்கக் கதைத்தார். சதவீதங்கள் அவரின் விரல் நுனியில் இருந்தன. சோக்கும் கரும்பலகையும் கொடுத்தால் வரைபுகள், அட்டவணைகள் எல்லாம் வரைந்து விளக்குவார் போலிருந்தது.  ' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில்  றிசல்ட்ஸ் எப்படி ' என்று மனதில் வந்த வினாவைக் கேட்க நினைத்தவன் கேட்காமல் விட்டான். காலைவேளையில் இவரை ஏன்  சோர்வடையச் செய்வான்? இவ்வளவு பள்ளிக்கூடங்களிலிருந்தும் மொத்தமாய் மூன்று பேர் சித்தியடைந்திருப்பார்களா?  ஒல்லிகளை, முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்து விட்டு, நல்ல ஓரிரண்டு தேங்காய்களை  காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும்  ஒரு தேங்காய் வியாபாரி போன்று வாமதேவன்  இந்திரனின் மனதில் தோன்றினார். வருமானங்குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கௌரவத்தைப் பறைசாற்றப் பயன்படுகின்றன். ஓடி விளையாட வேண்டிய பிள்ளைகளை ரியூட்டறிகளுக்கும், பாடசாலைகளில் மேலதிக வகுப்புக்களுக்கும் அனுப்பிக் கஷ்ரப்படுத்தும் பெற்றோர்...  மாநாட்டைத் தொடக்கி வைக்க அமைச்சர் வருவதற்குப் பிந்தும் என்று கதைத்தார்கள். ஆய்வுக்குப் பொறுப்பான செயற்றிட்டத்தின் பணிப்பாளர் சோமபால தனது 'கோட்'டைச் சரி செய்தவாறு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். ஆசிரியராய் சேவையை ஆரம்பித்து, ஆசிரிய ஆலோசகர், அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் எனப் பல பதவிகள் வகித்து ஓய்வு பெற்று விட்டாலும் தனது சேவை கல்விச் சமுதாயத்திற்குத் தேவை என நினைத்தோ அல்லது பணத்திற்காகவோ பணிப்பாளர் பதவியில் ஒட்டிக் கிடக்கிறார். கிழவர்கள் எல்லோரும் சேவை செய்யவோ உழைக்கவோ வெளிக்கிட்டுத்தான் இளைஞர்களெல்லோரும்  வேலை தேடி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று அலையிறார்கள் போல. செயற்றிட்டத்திற்கு செலவழிக்கும் கோடிகளில் ஐந்து வீதமாவது சோமபாலவின் சம்பளத்திற்கும் வாகனத்திற்தும் ரெலிபோன் செலவுகளிற்கும் செல்கின்றதைனக் கேள்விப்பட்டிருக்கிறான்.   • கருத்தரங்கு ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர் தனதுரையை சிங்களத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார். 'கோட்' அணிந்த ஒருவர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். 'சகல இன மக்களையும் தமது அரசு சரி சமனாய்க் கருதுகிறது மாகாண ரீதியாக செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டு கல்வியின் விருத்திக்காய் செயற்றிட்டங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முதலில் கிழக்கு, வடக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்படும்...'  தமிழ் அதிகாரிகள் பலமாகக் கை தட்டினார்கள். செயற்றிட்டம் உருவாக்கப்பட்டால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வி மேம்படுமென நினைக்கிறார்களா... இல்லை சில பதவிகளில் அமர்ந்து மேலதிகமாய் உழைக்கலாம்  என நினைக்கிறார்களா?  ஆய்வுகள், ஆய்வறிக்கைகள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்று செலவளிப்பதை விட செயற்றிட்டங்களால் வேறு பயனிருப்பதாக அவன் அறியவில்லை.  அமைச்சர் கரங்கூப்பி விடைபெற்றுச் செல்ல சோமபாலவும் வேறு சிலரும் அவரை வழியனுப்ப வெளியே சென்றனர்.  பேராசிரியர் தம்பித்துரை தலைமையில் கருத்தரங்கு ஆரம்பமாயிற்று. பேராசிரியர் அணிந்திருந்த  இளநீல வர்ணக் 'கோட்' அவருக்கு எடுப்பாகவிருந்தது. பேராசிரியர் தனது வழமையான நகைச்சுவைப் பாணியிலான உரையை ஆரம்பித்தார். சபை வயிறு குலுங்கச் சிரித்தது. நல்ல காலம் பேராசிரியர் சினிமாப் பக்கம் நடிக்கப் போகவில்லை. போயிருந்தால், விவேக் வடிவேலு ஆட்கள் வாய்ப்பில்லாமல் அலைய வேண்டி வந்திருக்கும்! புள்ளி விபரங்கள் பேராசிரியரின் உரையில் தவழ்ந்து விளையாடின. ஆசிய நாடுகள் பலவற்றின் எழுத்தறிவு, கல்வி கற்போர் தொகை, வேலை வாய்ப்பு... என புள்ளி விபரங்களை அடுக்கிக் கொண்டு போனார். உலகிலேயே இலங்கையின் எழுத்தறிவு வீதம் குறிப்பிடத்தக்க உயர்ந்த மட்டத்தில் உள்ளதென்றார். பேராசிரியர் புதிதாக ஏதோ கண்டுபிடிடத்து விட்டார் என எண்ணி சபை உற்சாகமாய்க் கை தட்டிற்று.  கலாநிதி விபுலசேனா ஆய்வறிக்கையை முன்வைத்தார். மேடையில் மூன்று பெரிய திரைகளில் சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் அவர் முன் வைத்த விடயங்கள் தோன்றி மறைந்தன. மேடையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த மூவரின் விரல் அசைவுகளில் கணினிகளின் திரையில் தெரிந்தவைகள் 'மல்ரி மீடியாப் புரொஜெக்ரர்'கள் மூலம் திரைகளில் விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.  எளிய சலாகை வரைபுகள், கூட்டுச் சலாகை வரைபு, பல்தரச் சலாகை வரைபுகள், நிலைக்குத்துச் சலாகை வரைபுகள், மீடிறன் பல்கோணிகள், வட்ட வரைபுகள், பெட்டிவிசை வரைபுகள், படவரைபுகள், அட்டவணைகள்... பல்வர்ணங்களில் திரைகளில் வித்தியாசமான 'ஸ்ரில்'களில் திரைகளில் தோன்றி மறைய மண்டபத்தின் 'ஏசி'யின் குளிரில் இந்திரனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.  • பெரிய இலங்கைப் படம் திரைகளில் தோன்றிற்று. சூப்பர் ஸ்ரார்  ரஜனிகாந்தின் படங்களின் ஆரம்பத்தில் திரையில் வந்து விழும் எழுத்துக்கள் போல, இலங்கைப் படம் மீது மாகாணங்ககளின் பெயர்கள் வந்து விழுந்தன. மெல்லிய இசையுடன் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் வந்து மாகாணங்களின் மேல் நிரம்பின. இந்திரன் தேசப்படத்தை உற்றுப்பார்த்தான. வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்கள் சிவப்பில் தோன்றின. மேல் மத்திய மாகாணங்கள் பச்சையில் தோன்றின. ஏனைய மாகாணங்கள் செம்மஞ்சளில் தோன்றின.  சிவப்பில் தோன்றும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வி மிக அபாயகட்டத்திலிருப்பதாயும் அவ்மாவட்டங்களுக்கு விஷேட கவனம் எடுக்கப்பட வேண்டும் எனவும்,  செம்மஞ்சள் நிறத்திலிருக்கும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வியின் நிலை ஓரளவு நல்ல நிலையில் இருப்பதாயும், பச்சையிலுள்ள மாகாணங்களில் ஆரம்பக்கல்வி சிறப்பாய் இருப்பதாயும் கூறி தனது ஆய்வறிக்கை முன்வைத்தலைப் பலத்த கை தட்டல்களுடன் கலாநிதி விபுலசேனா முடித்துவைத்தார்.  இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு கோடிக்கணக்கிலை செலவளித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கு. சும்மா பார்த்தாலே தெரிகிறதே. கையிலை இருக்கிற பெரிய புண்ணை சக்தி வாய்ந்த குவிவு வில்லை வைத்து தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! வடக்கிலையும் கிழக்கிலையும் பெருந்தோட்டத்திலையும் எத்தனை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற ஒரு பாடசாலைக்கென்றாலும் வருச தொடக்கத்திலை புத்தகங்கள் போய்ச் சேர்ந்திருக்குமா? இவனுக்கு இப்படியான மாநாடுகளுக்குப் போக விருப்பமில்லை. அவற்றில் கலந்து கொள்வதை வெறுத்தான். ஆய்வறிக்கையும் பையும் கருத்தரங்கும் சாப்பாடும் கொடுப்பனவும்... விருப்பமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் பணிப்பாளர் கடமை லீவு பெறுவதற்குரிய றோஸ் நிறப் படிவத்தை நிரப்பி வைத்து விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தியிருந்தார். நிறுவகத்திலிருந்து தமிழ் அலுவலர் எவரும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் யாராவது தூக்கிப் பிடிப்பார்கள் என நினைக்கிறார் போல.  தேநீர் இடைவேளையில் மைலோவுடன் கேக், பற்றீஸ் கொடுத்தார்கள். இவன் அலுவலகத்திற்கு போன் செய்து தர்மினியிடம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் ஏழாவது புறூவ் பார்ப்பதற்காய் பின்னேரம் வருவதாகச் சொல்லி வைத்தான்.  கலந்துரையாடல் ஆரம்பமாகியிருந்தது. செயற்றிட்டப் பணிப்பாளர் சோமபால, பேராசிரியர் தம்பித்துரை, கலாநிதி விபுலசேனா ஆட்கள் மேடையில் இருந்தனர். சபையில் இருந்த பெரும்பாலனவர்கள் இலக்கிய விமர்சனக் கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல ஆய்வைப் பாராட்டியே பேசினர். ஆய்வாளர்களின் சேவை மனப்பாங்கு, நாடு பூராவும் தரவு சேகரிக்கப்பட்ட விதம், தேசிய மாநாடு ஒழுங்கு செய்யப்பட்ட விதம், ஆய்வறிக்கையை முன்வைத்த தன்மை... எல்லாவற்றுக்கும் ஒருவர் மாறி ஒருவராய்ப் பாராட்டினார்கள். நல்லாய் முதுகு சொறிந்தார்கள். இவனுக்கு சினமாய் இருந்தது. ஆய்வுக்காக அனுராதபுரத்திற்குப் போனபோது தனக்கு சிக்குன்குனியா வந்ததென  விபுலசேனா சொன்னார்.   ஆய்வு செய்வது தானே இவர்களின் வேலை. அவற்காகத்தானே இலட்சங்களுக்குக் கிட்டச் சம்பளமெடுக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பதவியுயர்வு பெறுகிறார்கள். சுற்றுலா போல ஒவ்வொரு மாகாணங்களுக்கும் செயற்றிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் போய் 'கெஸ்ட் ஹவுஸ்'களிலை தங்கி வந்திருப்பார்கள். அனுராதபுர அட்டமஸ்தான, சிகிரியாக் குன்று, கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளிக் கடற்கரை, நுவரெலியா உலக முடிவு எல்லாவிடங்களுக்கும் செலவில்லாமல் போய் வந்திருப்பார்கள். ஏன் விமானத்தில் பலாலிக்குப் போய் அங்கிருந்து நயினாதீவு நாகவிகாரைக்கே போயிருப்பார்கள். இவனுக்கு சபையினரின் அறியாமையை நினைக்கச் சிரிப்பு வந்தது.  வாமதேவன் எழுந்து நின்றார். பணியாள் ஒருவன் அவரிடம் 'வயரி'ல்லாத 'மைக்'கைக் கொடுத்தான். வடக்கு மாகாணக் கல்வி நிலைமை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடநூல்கள் இன்மை, பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடியாதிருத்தல், இரவில் மின்சாரத் தடை, மண்ணெய் தட்டப்பாடு,  உணவில்லாமல் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுதல் இவற்றால் மாணவர் ஒழுங்காகப் படிக்க முடியாதிருத்தல் பற்றியெல்லாம் கதைப்பாரென்று இந்திரன் நினைத்தான். தேசிய மாநாடுகளை வெள்ளிக்கிழமைகளில் நடத்துவதால் தன்னைப் போன்ற இந்துக்கள் மதிய உணவாக மரக்கறிகளையே சாப்பிட வேண்டியிருப்பதாயும் கருத்தரங்குகளை செவ்வாய், வெள்ளி தவிர்ந்த நாட்களில் நடத்தும் படியும் கேட்டு அமர்ந்தார். சோமபால வருத்தப்பட்டார். இனி இத்தவறு நடக்காமல் தான் பார்த்துக் கொள்வதாய் உறுதியளித்தார். பல தமிழ் ஆட்கள் கை தட்டினர். அன்வர் எழுந்து வெள்ளியில் நடத்துவதால் ஜூம்மாத் தொழுகை கூடத் தடைப்படுவதாயும் இனி மேல் வெள்ளிக்கிழமைகளில் வைக்காமல் விடுவதென்ற முடிவை இஸ்லாமியர் சார்பில் பாராட்டினார். சமயங்கள் ஒன்றுபடுகின்றன இந்திரன் மனதில் சிரித்துக்கொண்டான்.  ஒவ்வொரு வருசமும் ஒரே மாதிரியான நீல நிறப் பையைத் தருவதைக் தவிர்த்து எதிர்காலங்களில் வேறு நிறங்களில் தரும்படி ரெங்கசாமி  கேட்டார். பணிப்பாளர் ஒத்துக் கொண்டார்.  திருமதி  விமலராஜா எழுந்து வழமையாகத் தரப்படும் பை ஆண்களின் பாவனைக்கானது. பையைத் தயாரிக்கும் போது பெண்களையும் கவனிக்க வேண்டும் என்றார். பெண்ணுரிமை வாதியாக இருப்பாரோ?   'மேடம் பையை மிஸ்டர் விமலராஜாட்டைக் கொடுங்களேன்' என்று நவ்சாத் சொல்ல சபையில் சிரிப்பொலி எழுந்திற்று.  மாநாட்டில் பங்குபற்றுவதற்கான கொடுப்பனவு ரூபா இரண்டாயிரம் போதாதென்றும், பொருட்களின் விலை அதிகரித்துள்ள இக்காலத்தில் ஐயாயிரமாக அதிகரிக்கும் படியும் குரூஸ் கேட்டார். கை தட்டல் அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தன்னால் தனியாக இதைப் பற்றிக் தீர்மானிக் முடியாதென்றும் உத்தியோகத்தர்களுடன் கதைத்து தீர்மானிப்பதாகவும் சோமபால சொன்னார்.  இவனுக்கு வெறுப்பாய் இருந்தது. 'என்ன மனிதர்கள்' இவர்கள். செயற்றிட்டத்திற்குச் செலவளித்த பணத்தில் இரண்டொரு பள்ளிக்கூடங்களைக் கட்டியிருக்கலாம் என்று மனதில் தோன்றிற்று.  • சாப்பாட்டு மேசையில் இவனருகில் வாமதேவன் வந்தமர்ந்து சாப்பிட்டார். இந்திரன் அவரின் கோப்பையை எட்டிப் பார்த்தான். சோற்றுடன் பருப்பும் உருளைக்கிழங்கும் ஏதோ இலைக் கறியும் பப்படமும் மிளகாய்ப் பொரியலும் கிடந்தன.  ' ஹாய் இன்ரன் ஹவ் ஆ யூ' வாமதேவன் கேட்டார்.  ' சுகமாய் இருக்கிறன் சேர்'  ' தம்பி ஆறாம் வகுப்பு ஆசிரியர் கைந்நூல் வந்திட்டுதோ' வாமதேவன் ஆறாந்தர மாணவர்களின்  விசயத்தில் அக்கறையாய்த் தான்  இருக்கிறார் போல.  ' அதுக்கிப்ப ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியெண்டு பெயர் சேர். ஆறாவது   தரமாப் புறூவ் பாத்திட்டன் இன்னும் வேலை முடியேல்லை'  ' அது அவசரமில்லைத் தம்பி ஆறுதாலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களைத் தந்தீரென்டா நான் அதைப் புத்தகமாய்க் கட்டிப் போட்டு அவனுக்குப் படிப்பிச்சுப் போடுவன். அவனுக்கு சரியான விளையாட்டுப் புத்தி படிக்கிறேல்லை'  கொடுப்பனவு பெறுவதற்காய் வரிசையில் நிற்கையில் வாமதேவன் காலையில் இவனுக்குச் சொன்ன கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றி 'கம்பஹா' கல்வி அதிகாரி பண்டாரவுக்கு இங்கிலீசில் விளக்கிக் கொண்டிருந்தார்.  ' பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%...'    பண்டாரவுக்கு முன்னால் இந்திரன் வாமதேவனிடம் ' சேர், அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க. .நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில்  றிசல்ட்ஸ் எப்படி'  என்று இங்கிலீசில் கேட்கத் தொடங்கினான்."

ஆலமர விழுதுகள்...


"அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள் தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து. உயிருக்குயிரான காவலாளியுங்கூட....

காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்?' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தால் சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத்

தெரிவிப்பார்கள். எல்லோரும் உறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையணை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றாள் சிறுமி.

றெயில் வந்தாலென்ன?, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

'இதென்னடா சனியன்! வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன"

mama

                                                               முதல் முத்தம்




                                                                   நடந்த கதை




                                                                   கடிதம்



                                                                  என் காதல்




                                                கொஞ்சம் கதை மீதி கவிதை




                                    கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

Wednesday 21 December 2011

எனது முதல் காதல்.....

 
"அன்று எனது முதல் நாள் கல்லுரி என்பதால் வழக்கத்துக்கு மாறாக கோவிலுக்கு சென்று வேகமாக நான் கல்லுரிஐ அடைந்தேன் .



கனவுகள் மட்டுமே காணும் ஒரு சராசரி தமிழனான என் வாழ்கையில், மறக்க முடியாத நாள் இதுதான் தமிழ் என்னில் ஆதிக்கம் செய்ததையும் மீறி சற்று தயக்கத்துடன் என்னைபற்றி நான் அங்கிலத்தில் சொல்லி அமர்ந்தேன்.



ஓடையில் ஓடிய நீர் கல்லில் குதித்து எழுந்த சத்தம் போல ,ஒரு மெல்லிய சிரிப்பை கேட்டு சட்டடென்று பின் திரும்பினேன்.



ஒரு மின்னலை பார்த்த உணர்வு எனக்கு , எனினும் இம்முறை என் கண்களை துடைத்துக்கொன்று அந்த மின்னலை எதிர்கொள்ள ஆயத்தமானேன்.



அப்போது , ஒரு அழகிய தேவதை ........!



என்னை பார்த்தும் சற்று புருவத்தை உயர்த்தி பார்த்து திரும்பி கொண்டாள் பிரமித்து போன நான், நினைத்துக்கொன்டேன்



"இவள் என்ன ரோஜாதோட்டத்து கொள்ளைகாரியா ...?



இத்தனை அழகையும் இவளே எடுத்துக்கொண்டாள் மீண்டும் பார்க்க துடித்த என் மனதை சற்று கண்டித்து ,அன்று மாலை அவளை பார்காமலே வீடு திரும்பினேன் .



எதையோ இழந்த உணர்வு ,என் கையில் தவறுதலாக எடுத்து வந்த என் நண்பனின் புத்தகம் வேறு , மீண்டும் யோசித்தேன் ,



ஆம் ..!



அன்று என் இதயத்தை நான் தொலைத்து விட்டதாகவே உணர்ந்தேன் என்னுள் ஒழிந்த்திரிந்த லட்சிய கனவுகள் சற்று என் நினைவுக்குள் வந்து என்னை எச்சரிக்கை செய்து மறைந்தது.



நான் கண்டிப்புடன் என் இதயத்திடம் ஒரு பொய் சொன்னேன்"



நான் அவளை காதலிக்கவில்லை என்று"சற்று ஏளனமாகவே சிரித்துகொண்டது என் மனசாட்சி ????????????"

அன்னையின் விரல் பிடித்து...


"உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?

என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன

என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,

மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !

வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்

தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!

கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !"

அவள் அறிமுகம்...

 
"அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !

சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்

தேநீர் அருந்த அழைத்தேன் !

சற்று நடுத்தரமானது தான்

சட்டென பிடிக்கும் அழகுடன் இருந்தது

அந்த தேநீர் விடுதி!

இரண்டு தேநீர்

சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தோம் !

மெலிதாய் விரல்களில் பிடித்து

அவள் அருந்தும் அழகை ரசித்தேன்

அவள் அறியாத பொழுதுகளில் !

பேசிக்கொண்டேயிருந்தாள் !

பல வார்த்தைகள் காதில் விழவில்லை

ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?

சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை

சுற்றி சுழல விட்டேன் நான் !

அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை

மேஜை மீதுஆனால் ,

பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !"

முதல் கவிதை என் அம்மா


அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அணைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!
அம்மா
நான் சொன்ன
முதல் வார்த்தை..
எல்லோரும் சொல்லும்
முதல் வார்த்தை...
..
மா அம்மா
நாங்கள் அன்றே
சொன்ன முதல் கவிதை அம்மா..!

Tuesday 20 December 2011

மீண்டும் ஒரு பிறவி...?



"மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து சடங்கு செய்வதற்காக அவள் அப்பா குளித்தலை போய் வாங்கி வந்த நாற்காலியென முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கிறது. அவள் தாவணிப்பாவாடையணிந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட இன்னும் இருக்கிறது. எங்களுக்கு திருமணம் முடிந்து சென்னை வந்தபிறகு நைந்து போன அந்த கருப்பு வெள்ளைப்படத்தை ஏதோ பெரிய ரகசியம் போல தயங்கி தயங்கி தான் காட்டினாள். அந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு நினைத்துப் பார்க்க வேண்டும்? ஆனால் மனைவி இறந்து போன நேரத்தில் இதை இதைத்தான் நினைக்க வேண்டுமென மனதுக்கு ஏதேனும் சட்டம் போடப்பட்டிருக்கிறதா என்ன? அப்படியே இருந்தாலும் சொன்னதைக் கேட்கிற மாதிரியான மனதா எல்லோருக்கும் வாய்த்துவிடுகிறது? நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தவளைக் கொண்டு வந்து இந்த நாற்காலியில் உட்கார வைத்ததில் இருந்து அப்படியேதான் இருக்கிறாள். அப்போது இந்த திண்ணையில் சாய்ந்ததில் இருந்து நானும் இப்படியேதான் இருக்கிறேன். மனம் மட்டும் காலத்தை வருடக்கணக்கில் பின்தள்ளிக் கொண்டே இருக்கிறது. அவள் காலடியில் அழுதுகொண்டே இருக்கிற மகள், எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அவ்வப்போது தூண்டிவிடுவதுமாயிருக்கிறாள். இரவு முழுவதும் காரோட்டி வந்து சிவந்த போன கண்களில் வழிகிற கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சாய்ந்து அமரிந்திருக்கும் மகனை தாங்கியபடி நிற்கிறது இந்தப் பழையத் தூண்.

இந்தத் தூண் அப்போது இன்னும் அழகாய் இருந்தது. இந்தத் திண்ணையில் விரித்திருந்த பாயில்தான் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் என்றால், நானும், என் குடும்பமும். அன்று இந்தத் தூண் வரைக்கும் வந்து நின்றுவிட்டு, நிமிர்ந்துகூட பார்க்காமல் மறைந்துவிட்டாள். சாதகம் எல்லாம் பொருந்தியிருந்தும் மகளைச் சென்னைக்கு அனுப்ப அவள் வீட்டில் எல்லோருக்குமே தயக்கம்தான். அவள் சொல்லுகிற போதெல்லாம் கண்டிப்பாக ஊருக்கு அழைத்து வந்துவிடுவதாய் நான் வாக்குக் கொடுத்துதான் எங்கள் திருமணம் நடந்தது. சென்னை வந்து விட்ட இத்தனை வருடங்களிலும் ‘எங்க மகிளிப்பட்டில…’ என்று ஆரம்பித்து தினமும் பத்து முறையாவது சொல்ல, அவளுக்கு ஆயிரம் விசயங்கள் இருந்தன இந்த ஊரில். முதன்முறையாக ஊரைவிட்டு வெளியே வந்திருந்தாலும், ஒன்பதாவது வரையிலும் படித்திருந்ததால் சென்னை நாகரிகத்திற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதில் அவளுக்குப் பெரிய சிரமம் இருந்திருக்கவில்லை. ஆனாலும் இந்த ஊரை மொத்தமாய் தன்னோடு சுருட்டிக் கொண்டு வந்துவிட்டதைப் போல எப்போதும் இதனோடு நெருக்கமாகவே இருந்தாள். திருமணத்திற்குப் பிறகு என்னைப் பிரிகிற சில நாட்களும்கூட துயரமென அவள் வருந்தியபோதும், என்னோடு அவள் சென்னையில் இருந்த காலங்களை விட, அவளோடு நான் மகிளிப்பட்டியில் இருந்த காலங்களிலேயே அவள் முழுமையான மகிழ்ச்சியில் இருந்திருக்கிறாள். சென்னையிலிருந்து வரும்போது லாலாப்பேட்டையில் இறங்கும்போதே அவளிடம் தெரியும் அந்த மாற்றத்தை உணர்ந்திருக்கிறேன்.

லாலாப்பேட்டையில் இருந்து வரும் அடுத்த மினி பஸ்சின் சத்தம் கேட்கிறது. வாய்க்கால் முக்கில் இறங்கிய சொந்தங்களில் அங்கிருந்தே ஒப்பாரியை ஆரம்பித்து விட்ட ஒரு கிழவியின் குரலைக் கேட்டு, இங்கு அழுதழுது ஓய்ந்திருந்த பெண்களுக்கு மீண்டும் கேவல் ஆரம்பித்தது. அழுதுகொண்டே ஓடிவந்த பெண்களோடு இங்கிருந்த வர்களும் சேர்ந்து கொண்டு அழ ஆரம்பிக்க திடீரென சத்தம் அதிகமாகி, நினைவுக்குள் எதையெதையோ உடுக்கையடிக்கிறது எனக்கு. எல்லாப் பெண்களும் வட்டமாய்க் கட்டிப்பிடித்துக் கொண்டு அசைந்து அசைந்து ஒப்பாரி வைக்க, யாரும் நாற்காலியைத் தட்டி விட்டு விடக்கூடாதே என்கிற பயமெனக்கு. ஆடுகிறவர்கள் எல்லாரும் அவள் கையை இடித்து இடித்து விட அவள் கையை எடுத்து உள்ளே மடித்து வைக்கப் பார்க்கிறேன். ஆனால் அது நாற்காலியோடு கட்டப்பட்டிருக்க, அவள் கையையேப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். மகன் அதனை வித்தியாசமாகப் பார்க்கிறான். அதற்குள்ளாகவே அவளைப் பிணம் என்று அவனால் உணர்ந்துகொள்ள முடிந்திருக்கிறது போல. என்னால் இன்னும் முடியவில்லை. அவள் இறந்து விட்டாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக கிரகித்துக் கொள்ள முயன்றாலும், இது எல்லாமே கனவாக மாறி திடீரென நான் தூக்கத்தில் இருந்து விழிப்பேன்; எப்போதும் போல என் மார்பில் கை போட்டு அவள் துங்கிக்கொண்டிருப்பாள் என்றே நான் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றிரவு கூட என் மார்பில் கைபோட்டுக்கொண்டு தூங்கியவள்தானே இவள். திருமணத்திற்கு முன்பு நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்பட்டவள் திருமணத்திற்குப் பிறகு பல சமயங்களில் என்னையே வெட்கப்பட வைத்திருக்கிறாள். பேசும்போது கண்களைப் பார்த்து பேசுவது மட்டுமே நெருக்கமாய் இருப்பதை உணர்த்துமென்று நம்பிக் கொண்டிருந்த எனக்கு, கைகளையோ, தோள்களையோப் பிடித்துக் கொண்டு இவள் பேசும்போது அது பொய்யென தோன்றியிருக்கிறது. தொடுதல் உணர்த்தும் அர்த்தங்கள் புரியவைத்தவள் அவள். இத்தனை வயசிலும் இரவுத் தூக்கம் ஒரே மெத்தையில் தான். கையைப் பிடித்துக் கொண்டோ, மார்பில் கைபோட்டபடியோதான் தூங்குவாள். இரண்டு பிரசவத்தின்போதும் பக்கத்திலிருக்க சொல்லி என் கைகளைத்தானே பிடித்துக் கொண்டிருந்தாள். முதல் கர்ப்பத்தின் போது என்ன குழந்தை வேண்டுமென்று அவள் கேட்டபோது, ஆண் என்று நான் சொன்னதும் ஆச்சர்யப்பட்டாள். மகன் அம்மாவிடம்தான் அன்பாயிருப்பான், மகள் தான் அப்பாவிடம் அன்பாயிருப்பாள் என்று, எனக்கு விளக்கமெல்லாம் சொன்னாள். என் மேல் பாசமாயிருக்கிற மகளை விட அவள் மேல் பாசமாயிருக்கிற மகன் தான் வேண்டுமென்று சொல்லி வைத்தேன். ஆனால் அப்போது பெண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டுச் சிரித்தாள். இரண்டாவது பிரசவத்தில் தான் ஆண்குழந்தை பிறந்தான். நேற்று நடந்தது போலிருந்தாலும் எல்லாம் முடிந்து முப்பது வருடமாகி விட்டது.


ஆண்கள் வரிசையாக வர ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நான் எழுந்து நின்று இரு உள்ளங்கைகளையும் நீட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம். ஒவ்வொருவராக அவர்கள் கைகளினால் என் உள்ளங்கை தொட்டு என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்களாம். வேடிக்கையாக இருக்கிறது. வேதனையாகவும்தான். துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களாம். அவர்களுக்கும் துக்கமாக இருக்கிறது என்று சொல்லட்டும். ஆனால் என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டதாக சொல்லுவதுதான் வேதனை. இருக்கிற துக்கத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து விட முடியுமென்றால் நன்றாகத்தான் இருக்கும். முடியுமா? எல்லோரும் அங்கங்கே அமர்ந்து கொண்டபிறகு மீண்டும் திண்ணையில் சாய்கிறேன். ‘என்னைய்யா அருவது வயசு ஆம்பள அழுவலாமா? சந்தோசமா பொண்டாட்டிய அனுப்பி வைப்பியா’ தடி ஊன்றி வருகிற எழுபத்தைந்து வயது பெரியவர் என் தோளைப் பிடித்துக் கொண்டு சொல்லி விட்டு அமர்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி இறந்தபோது சாராயத்தைக் குடித்துவிட்டு அழுது தீர்த்தவர், இப்போது எனக்கு அறிவுரை சொல்கிறார். அவர் சாராயம் குடித்து விட்டு அழுதார். நான் சாராயம் குடிக்காமல் அழுகிறேன். ஆணென்றால் அழக் கூடாதென்று யார் சொன்னது?

ஆண் அழக்கூடாதென்று அவள் சொல்லியிருக்கிறாள். பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு முதல் மாரடைப்பு வந்தபோது மருத்துவமனையில் அவளைத் தேற்றி விட்டு வெளியே வந்து நான் அழுததை எப்படியோ தெரிந்துகொண்டு விட்டாள். அறுவை சிகிச்சையறைக்கு அவளை உள்ளே அனுப்பும்போது பயப்படாமல் இருக்க சொல்லி நான் தேற்ற, ‘நான் உள்ள போனதும் நீங்களும் இங்க அழாதீங்க. ஆம்பள அழக் கூடாது’ என்று என்னைத் தேற்றி விட்டுப் போனாள். அதற்கு முன்பெல்லாம் நோயென்றா, உடல்நிலை சரியில்லையென்றோ மருத்துவமனைக்கேப் போகாதவள். எப்போதாவது இரவு நேரத்தில் தலைவலிக்கிறதென சொல்லுவாள். கொஞ்சம் சுக்கு தட்டி போட்டு சூடாக ஒரு டம்ளர் காப்பி வைத்துக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துக் கொள்வாள். காலையில் எழுந்து எப்போதும் போல இயங்க ஆரம்பித்துவிடுவாள். கடைசி வரைக்கும் அவளுக்காக நான் செய்த ஒரே சமையல் சுக்கு காபி மட்டும் தான். அவள் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்கு எந்த வேலையை செய்வதற்கும் அவள் என்னை அனுமதித்ததில்லை. அந்த குற்றவுணர்ச்சியில் அவளை நான் கவனித்துக்கொள்வதற்காகவேனும் தலைவலியென்று அவள் படுத்துக் கொள்ளக்கூடாதா என்று சில சமயம் யோசிப்பேன்.

நாற்காலியிலிருந்து இறக்கி நீள பெஞ்சில் அவளைப் படுக்க வைத்து விட்டார்கள். பெண்கள் எல்லாம் சேர்ந்து புடவைகளைச் சுற்றிப் பிடித்து மறைப்பு கட்ட, குளிப்பாட்டித் தயார்படுத்துகிறார்கள். வேறு புடவை உடுத்தி, பெஞ்சோடு அவளைக் கொண்டு வந்து நடு வாசலில் வைத்து சடங்குகள் துவங்குகின்றன. என்னையும் அழைக்கிறார்கள். அவள் நெற்றியில் சந்தனத்தை தடவுகையில் எனக்கு கை நடுங்குகிறது. அதற்கு மேல் முடியாமல் மீண்டும் திண்ணையில் வந்து அமர்ந்து கொள்கிறேன். எல்லா சடங்குகளையும் முடித்து அவளைத் தேரில் தூக்கி வைக்கிறார்கள். தேருக்கு முன்னால் நடந்து செல்ல நானும் எழுந்து போக வேண்டும்.

சொர்க்கத்திற்கு யார் முன்னால் செல்வதென்று ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். இந்த உலகத்தில் அவளை விட்டுத் தனியாக எனக்கு இருக்க தெரியாதாம். அதனால் நான் தான் முதலில் போக வேண்டுமென்றும், என்னை அனுப்பி வைத்து விட்டு அவள் பிறகு வர விரும்புவதாகவும் சொன்னாள். ஒருவேளை அவளை முதலில் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு வந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். ‘எமன எப்படியாவது ஏமாத்திட்டு திரும்பி உங்ககிட்டயே வந்துடுவேன்ல’ என்று சொல்லி சிரித்தாள்.

தேரில் படுத்துக்கொண்டு இப்போது கண்களைத் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாளே இது நிஜம்தானா? என்னைத் தவிர வேறு யாரும் அவளைப் பார்க்கவில்லையா? அவள் மெதுவாக எழுகிறாள். இப்போதுதான் மற்றவர்களும் கவனிக்கிறார்கள். அழுது கொண்டிருந்த சத்தம் அப்படியே நின்று போகிறது. தேரைத் தூக்கப் போனவர்கள் அப்படி அப்படியே சிலை போல நிற்கிறார்கள். அடித்துக் கொண்டிருந்த மேள சத்தம் கூட நின்றுவிட்டது. என்னால் இன்னும் என் கண்களை நம்பவே முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தவள், கட்டப் பட்டிருந்த கைகளை விடுவித்துக் கொள்கிறாள். யாருக்குமே அவளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றவில்லை. எல்லாருமே ஆச்சர்யத்தில் அப்படியே வாயடைத்து சிலை போல நிற்கிறார்கள். இல்லை பயமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவள் வெகு சாதாரணமாக தூங்கி எழுபவளைப் போல கட்டுகளை அவிழ்த்து விட்டு என்னை நோக்கி நடந்து வருகிறாள். எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வருகிறது. எல்லாமே கனவாகத்தான் இருக்குமோ? வீட்டிலிருக்கும் மெத்தையிலிருந்துதான் தூங்கியெழுந்து வருகிறாளா? சுற்றிலும் நன்றாக உற்றுப் பார்த்தேன். இல்லை. இல்லவே இல்லை. நேற்றிரவு மாரடைப்பு வந்து மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவள் இறந்ததும் உண்மை. இரவோடிரவாக இங்கு மகிளிப்பட்டிக்கு கொண்டு வந்ததும் உண்மை. அவளைத் தேரில் தூக்கி வைத்தபின் உயிர் பெற்று எழுந்து வந்து இதோ என் முன் எப்போதும் போல அழகாக சிரித்துக் கொண்டிருப்பதும் உண்மைதான். சொன்னது போலவே எமனை ஏமாற்றிவிட்டு வந்துவிட்டாளா? இதெல்லாம் சாத்தியமா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு அவள் திரும்பி வந்ததே போதும். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறேன். இன்னுமிந்த ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் சத்தமே இல்லாமல் வெளி வருகின்றன என் வார்த்தைகள் – ‘சொன்ன மாதிரியே திரும்பி வந்துட்டியாம்மா?’. கேட்டதும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் – ‘இல்லீங்க… நீங்க தான் வந்துட்டீங்க"

கடிதம்....



இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.

அப்பா என்றால் பாசம், அப்பா என்றால் அன்பு, எனக்கு எல்லாமுமாய் நீங்கள் தான் இருந்திருக்கிறீர்கள். அம்மாவின் அலட்சியமும், அசட்டையும், உதாசீனமும் என்னை அம்மாவிடம் இருந்து தூரவிலகிப்போக வைத்ததாலோ என்னவோ, உங்கள் மீது அதிகம் ஈடுபாடு கொள்ள வைத்தது. அன்பையும் பாசத்தையும் என் இதயத்தில் விதைத்து விட்டு உங்கள் இதயத்தை மட்டும் எப்படி அப்பா உங்களால் கல்லாக்கிக் கொள்ள முடிந்தது?

அம்மாவிற்கும் உங்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பூதாகரமாய் வளர்ந்து இப்படி விவாகரத்தில் முடியுமென்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'இவளுக்கு அப்பா நீங்கள் அல்ல' என்று அம்மா ஆவேசமாகக் கத்திக் கூச்சல் போட்ட போது கூட நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஆனால் 'நீ என் பெண்தானா?' என்ற கேள்விக் குறியோடு என்னை நீங்கள் நிமிர்ந்து பார்த்தீர்களே அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் பிஞ்சுமனங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை ஏன்தான் பெற்றவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்களோ தெரியாது. என் எதிர் காலத்தை நினைக்க எனக்கே பயமாக இருக்கிறது. எல்லோர் பார்வையிலும் நான் ஒரு கேள்விக் குறியாய்த் தெரிகிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கேற்பட்ட இந்தப் பாதிப்பு ஒரு மாறாத ரணமாய் என் மனதில் பதிந்து விட்டது.

அப்பா கடைசியாக உங்களிடம் ஒரு வேண்டுகோள்! விஞ்ஞானம் முன்னேறி விட்டது. அம்மா சொன்னது உண்மை என்றால் டி.என்.ஏ ரிப்போட் வந்ததும் நான் உங்கள் பெண் அல்ல என்பது நிரூபணமாகிவிடும். அந்த நிமிடமே நான் உங்களை விட்டு அன்னியப்பட்டு விடுவேன். அப்படி ஒரு நிலைமை ஏற்படுமுன் கடைசியாக ஒரு முறை உங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். எனக்கென்னவோ உங்கள் தோளில் முகம் புதைத்து மனதில் இருப்பதை எல்லாம் உங்களிடம் அழுது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருக்கிறது! உங்கள் பிடிவாதத்தை கைவிட்டு என்னைப் பார்க்க ஒரே ஒரு முறையாவது வருவீர்களா?'

அந்தக் கடிதத்தை வாசித்ததும் அவர் இடிந்து போய்விட்டார். கணவன் - மனைவி பூசல் காரணமாக ஒன்றுமறியாக் குழந்தை வீணாகத் தண்டிக்கப் படுகிறாளே என்று நினைத்தார். விவாகரத்துக் கோரும் அளவிற்கு அவர் என்ன தான் தப்புச்செய்தார்?

கல்யாணமான புதிதில் அவருக்கு ஏற்றமாதிரி நடந்து கொண்ட மனைவி காலப் போக்கில் தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவர்களுக்குள் தொடங்கிய பிரச்சனை குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து விசுவரூபம் எடுத்தது.

அவரிடம் பணம் இருந்தது, அவளிடம் அழகும் இளமையும் இருந்தன. அவளது விருப்பம் இல்லாமல் அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்பது அவளாகச் சொல்லும் வரை அவருக்குத் தெரியாது. ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அவரிடம் உள்ள வசதிகளை அனுபவிப்பதற்காக அவளும் இவ்வளவு காலமும் மௌனமாய் அவரோடு ஒத்துப் போயிருக்கிறாள்.
'உனக்கு விருப்பம் இல்லாமலா இந்தக் கல்யாணம் நடந்தது?'
'ஆமா! என்னை ஒரு பெண்ணாய் யாருமே மதிக்கலே! உங்களுடைய பணத்தைக் குறிவைத்து என் ஆசைகளை, என் காதலை, கடந்த காலத்தை எல்லாவற்றையுமே எங்க அப்பா அடமானம் வைத்து விட்டாரே!' அவள் விசும்பி விம்மலாய் வெடித்தாள்.

'காதலா.......?'

'ஆமாம் காதல்தான்! என் காதலனைத் திருமணம் செய்யப்போவதாக நினைத்துத் தான் அவனோடு நான் நெருங்கிப் பழகினேன். ஆனால் விதி தான் உங்கள் உருவத்தில் வந்து விளையாடி விட்டதே! இனிமேலாவது எனக்கு விவாகரத்து மூலமா விடுதலை கொடுங்க...'

'அப்போ இத்தனை காலமும் என்னோட வாழ்ந்ததெல்லாம்......?'

'வாழ்ந்தது இந்த மீனாவோட உடம்பு மட்டும் தான், மனசல்ல! இனியும் போலியாய் என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உங்களோடு வாழ என்னாலே முடியாது. எனக்கு இந்த நரகத்தில் இருந்து விடுதலை வேணும்!'
'பிரிஞ்சு போகத்தான் வேண்டும் என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் நம்ம பெண்ணோட கதி?''

'நம்ம பெண்ணா? யார் சொன்னது அவ உங்க பெண் என்று?'

'நீ... என்ன சொல்கிறாய்?'

'ஆமாம்! திவ்யாவிற்கு அப்பா நீங்க இல்லை!'

''இந்தா பார்! நம்ம குடும்ப வாழ்கையோட விளையாடாதே!'

'நான் விளையாடலே, ஆனால் அதுதான் உண்மை!'

இடி ஒன்று தாக்கியது போல அவர் அதிர்ந்து போனார்.
'அப்போ திவ்யா என்னோட பெண் இல்லையா?'

'இல்லை.

'பொய்..! என்னை அவமானப்படுத்த பொய் சொல்றே.. பிரியணும்னா போய்த் தொலை.. எதுக்காக இப்படி சித்திரவதை பண்றே..'

'இப்போ திவ்யா உங்க பெண்ணு இல்லைன்னு நிரூபிக்கணும் இல்லியா..?'

'கடவுளே!...

'நிரூபிச்சுக் காட்டறேன்

மனித மனத்தில் விழும் ஏமாற்றப் பள்ளங்கள் குரூரமாக வக்கிரங்களால் நிரம்பிவிடும் போலும்... அவள் அவனை அவமானப்படுத்தவே சதி தீட்டினாள். லீவுக்கு வந்த திவ்யாவைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி...

ஹாஸ்டல் விருந்தினர் அறைவாசலில் எதிர்பாராமல் அவரைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள் திவ்யா. அப்புறம் சமாளித்துக் கொண்டு, 'நான் உங்களுக்கு ஒரு கடிதம் போட்டேனே கிடைத்ததா?' என்றாள்.

'கிடைச்சதும்மா...'

'டி.என்.ஏ ரிப்போட் இன்னும் வரல்லையா?'

'வந்திடிச்சு!'

'வந்திடிச்சா?'
அவள் முகத்தில் ஏமாற்றமும், அதே நேரத்தில் அதன் முடிவை அறிந்து கொள்ளும் தவிப்பும் தெரிந்தன.

'நினைச்சேன், நீங்க தயங்கி நிற்கும்போதே உங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும் என்று நினைச்சேன்!'

'தெரியும்!'

'அப்போ அம்மா சொன்னது அத்தனையும் உண்மை தானே?'

'இல்லை, அம்மா சொன்னதில் உண்மையில்லை! அம்மாவிற்கு என்னோடு வாழப்பிடிக்கலை, அதனாலே எனக்குக் கோபமூட்டி என்னிடம் இருந்து விவாகரத்து வாங்கத்தான் அம்மா அப்படிச் சொல்லியிருக்கா!'

'அப்பா! நீங்க என்ன சொல்லுறீங்க?'

'டி.என்.ஏ ரிப்போட்டைப் பார்த்தேன்! நீ என்னோட பெண்தான்!'

'உண்மையாவா...?'

'ஆமாம்! யார் என்ன சொன்னாலும் நீ என்னோட மகள்தான்!'

'அப்......பா!' அந்த ஒரு சொல்லுக்காகவே காத்திருந்தது போல அவள் பாய்ந்து வந்து அவரைக் கட்டி அணைத்து மார்பிலே முகம் புதைத்து விக்கி விக்கி அழுதாள். இன்னும் பெரிதாக நெஞ்சு வெடிக்க ஓலமிட்டு அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது.

'அழாதே அம்மா!' அவர் பாசத்தோடு கண்ணீரைத் துடைத்து விட்டார். சட்டென்று அழுவதை நிறுத்தி, அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

'இனிமேல் நான் அழமாட்டேன், எனக்கும் அப்பா இருக்கிறார்!' அவள் சந்தோஷமிகுதியால் அவர் கைகளுக்குள் முகத்தைப் புதைத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

மகளைத் திருப்திப் படுத்திய சந்தோஷத்தோடு அவர் வீடு திரும்பினார். வீடு வந்ததும் முதல் வேலையாக பிரித்துப் படிக்கப்படாத அந்த டி.என்.ஏ ரிப்போட்டை அப்படியே கவரோடு சேர்த்துக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டார். மனம் அமைதியாக இருந்தது. இந்த அமைதிக்காக அவர் கொடுத்த விலைகூட அதிகமாகத் தோன்றவில்லை. மீனா கோரிய விவாகரத்தில் பரஸ்பர சம்மதம் என்று மறுபேச்சின்றி கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்கு அவளும் டி.என்.ஏ அறிக்கை முடிவை திவ்யாவிடம் வெளியிடுவதில்லை என்று வாக்குறுதி அளித்திருந்தாள். விவாகரத்து வழக்கு முடிய சிறிது காலம் ஆகலாம்... ஆனால் திவ்யாவின் நிம்மதி ஆயுட்காலத்திற்கும் நீடிக்கும்.